கடந்த சில நாட்களாகவே செட்டிக்குளம் ஆனந்தகுமாரசுவாமி, இராமநாதன் நலன்புரி கிராம பாடசாலை கா.பொ.த (சா/த) மாணவர்களுக்கும் உ/த மாணவர்களுக்கும் கணித, பௌதீக பாட கருத்தரங்குகள் எமது வளாக மாணவர்களால் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டது. எனக்கும் அதில் பங்குகொள்ள வாய்ப்புக்கிடைத்தது.சா/த மாணவர்கள் பெரும்பாலானோர் தரம் 10 ஐ முழுதாக முடிக்கவில்லை. 2008ம் ஆண்டு முழுக்க யுத்தம் அவர்களை அவர்களுடைய இடங்களில் இருந்து துரத்தியிருந்தது. 2009 பற்றி சொல்லதேவையில்லை என் நினைக்கிறேன். பெரும்பாலானோர் வெள்ளைமுள்ளிவாய்க்கால் வரை சென்று மீண்டவர்கள். இறுதி நாளில் இங்கு வந்தவர்கள். உயிரை தவிர மற்றதெல்லாம் விட்டு வந்தவர்கள். அதுவும் இராமநாதன் முகாமில் உள்ளோர் எல்லாம் இழந்து, பெரும்பாலும் புதுக்குடியிருப்பு, முல்லைதீவை சேர்ந்தவர்கள். ஆனந்தகுமாரசுவாமி முகாம் நிலவரம் இராமநாதனிலும் பார்க்க சற்று பரவாயில்லை. தகரக் கொட்டகைகள், நிலம் concrete பண்ணியிருந்தது. இராமநாதன் நிலம் மண்ணால் மெழுகப்பட்டு, தறப்பாளினால் கூரை வேயப்பட்டது. மழை பெய்தால் எப்படியிருக்கும். அதுவும் பாரவூர்திகள் அடிக்கடி சென்றும் வந்தும் நிலம் ஒரே சேறும் சகதியும் தான், தடக்கி விழாமல் நடக்க பயிற்ச்சி எடுக்கவேண்டும்.
நாங்கள் இங்கிருந்து வெள்ளி இரவு சென்று சனி அங்கு தங்கி ஞாயிறு மீண்டும் திரும்புவோம். இதில் (கருத்தரங்கில்) எமது இளைய நண்பர்களின் பங்கு அளப்பரியது. கருத்தரங்கிற்கான தொடக்கம் பாட சிறு உதவிக்குறிப்புகள், பாட மாதிரி வினாத்தாள்கள், உ/த இற்குரிய பாட notes எல்லாமே photocopy எடுத்து கொடுக்கப்பட்டன. இக்கருத்தரங்கிற்கு வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வெல்ட் அம்மையார், கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பாளர் திரு குருகுலராஜா, முகாம் பொறுப்பதிகாரி கப்டன் லகிரு குணவர்த்தன, கப்டன் நவரத்ன ஆகியோரின் ஒத்துழைப்பும் அப்பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவ பிரிகேடியர் (பெயர் ஞாபகம் இல்லை) ஆகியோருக்கு நன்றி கூறுவது அவசியம். அவர்களின் ஒத்துழைப்பின்றேல் இதனை நடாத்தியிருக்க முடியாது. நாங்கள் சென்ற வாகனத்திற்கு MOD இடமிருந்து அனுமதி பெற்றுத்தந்த மதிப்பிற்குரிய Professor சாந்தினி, Professor வல்கம ஆகியோரையும் மறக்க முடியாது. காலிழந்து சக்கர நாற்காலியில் வந்து கற்ற மாணவரையும் மறக்கமுடியாது. வகுப்பில் பெரும்பான்மை மாணவிகள்தான். சிலவகுப்பறைகளில் எல்லருமே மாணவிகள்தான். ஆண் மாணவர்கள் யாருமில்லை. யுத்தம் விழுங்கியிருந்தது அவர்களை. சின்னஞ்சிறிசுகள் புத்தகங்களுடன் அலைந்ததை காணக்கூடியதாயிருந்தது, குறிப்பாக சிறுமிகள். ஒன்றைக்கேட்டேன் தான் ஐந்தாம் ஆண்டாம், படிப்பிக்க ஆசிரியர் இல்லையாம், தங்களுக்கும் படிப்பிப்பீங்களோ? என்றது. என்னபதில் கூறுவதென்று தெரியாமல் ஏதோ கூறி மழுப்பிவிட்டேன். வேறு என்ன செய்ய? வவுனியாவில் உறவினர் உள்ளோரெல்லாம் மீள்குடியேறிவிட்டனர். ஆசிரியர்களும் அப்படித்தான். பெரும்பாலான ஆசிரியர்கள் எல்லாம் மீள் குடியேறிவிட்டனர்.
செட்டிக்குளம் மகா வித்தியாலயத்திலிருந்து அதிகாலை 8 மணிக்கெல்லாம் அங்கு ஆஜராகிவிடுவோம், அவர்களும் எற்கனவே வந்து தயாராக இருப்பார்கள். பெரும்பாலும் கணிதம்தான் முக்கிய பாடமாக இருந்தாலும் விஞ்ஞானமும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு கற்பிப்பதில் எமக்கு எந்த பிரச்சனையும் இருந்திருக்கவில்லை. நன்கு கவனித்தார்கள், நன்றாக கஸ்ரப்பட்டு வந்தவர்கள் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு (முள்ளிவாய்க்கால் அனுபவம் என்ன மறக்கப்படகூடியதா?). எங்களுடன் வந்திருந்த சகோதர மொழிபேசும் மாணவர் கூறினார், இவர்களுக்கு இதுவரை ஒழுங்காக கற்பிக்கபடவில்லை என்பதுதான் பிரச்சினையே தவிர, இவர்களில் எந்த குறையுமில்லை. தங்கடை ஆக்களென்றால் படிப்பிற்கும் போது 'வேறு' அலுவல் பார்ப்பார்களாம். அவர் பொலநறுவையை சேர்ந்தவர். மனதுக்கு சற்று நிம்மதியாயிருந்தது.
இந்த கருத்தரங்கின் இறுதிநாள் நிகழ்வு 22.11.2009 அன்று நடைபெற்றிருந்தது. மாணவர்களாலேயே முற்றுமுழுதாய் அந்த நிகழ்ச்சி நடாத்தப்பட்டிருந்தது. நிகழ்ச்சிகளும் தரம். இடையில் வைத்த கணிதபாட பரீட்சை மதிப்பெண்களுக்கு பரிசில் வழங்கப்பட்டது. பெரும்பாலும் மாணவியர்தான் பரிசில் பெற்றனர். கருத்தரங்கு நாட்களில் அவர்கள் தந்த உணவு எமக்கு வீட்டை ஞாபகப்படுத்தியது. விடைபெறும் போது அவர்கள் கண்ண்களில் கண்ணீர் எமது அன்புக்கு சாட்சி, எங்கள் கண்களிலும் தான்! என்னதான் முகாம் வாழ்க்கை கஸ்ரம் இருந்தாலும் அவர்களை (அவர்களின் வயதை) பொறுத்தவரை அது ஒரு சந்தோசமான வாழ்க்கையே! இறுதியில் மாணவர்களுடன் உரையாடியபோது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு உண்மையில் எங்களிடம் பதில் இல்லை.
இறுதிநாளில் பின்னூட்டம் தந்த மாணவி ஒருவரின் கருத்து,
"எமக்கு மிகமிக ஆசியுடன் கணிதபாடத்தை கற்பித்த எமது அண்ணாக்களுக்கு, நான் கணித பாடத்தில் A எடுப்பேன். நீங்கள் இவளவு காலமும் எமக்கு உதவி செய்தமைக்கு மிகமிக நன்றி தெரிவிக்கிறேன். எங்களுக்கு உதவி செய்த அனைத்து நெஞ்சங்களுக்கும் கோடி நன்றிகள். நான் இறுதிக்காலத்தில் இஞ்சினியாராக வந்து எனது இலட்சியத்தை வெளிப்படுத்துவேன். எமது உறவுகளை சண்டையில் இழந்திருந்தபோதும் உங்களுடன் கவலையின்றி இருந்தோம். திரும்பவும் எனது மிக மிக உள்ளங்கனிந்த நன்றியை தெரிவிக்கின்றேன்". - பா. சயனிகா, தரம் 10.
இன்னுமொரு மாணவி சொன்னார், தனது அண்ணா எங்கே இப்ப இருக்கிறார் என்று தெரியாது, உங்களுடன், அண்ணாவுடன் இருப்பதாக நினைத்தேன், இப்ப நீங்களும் எங்களை விட்டு போறியளோ? - இதற்கு நாங்கள் என்னபதில் கூறுவது?
9 comments:
நல்ல விடயம்....
கல்விச் செல்வமே செல்வம்...
நல்ல முயற்சிக்கு எனது வாழ்த்துக்களும் நன்றிகளும்.....
நன்றி கனககோபி!
well done boys
மாணவரின் கேள்விகள் கண்களை குளமாக்கின......:-(
நன்றி உமா ரவி.
உங்கள் பணிக்கு வாழ்த்துக்கள்.. அந்த சிறுமியின் கேள்வி பதிவை வாசித்து முடித்தவுடனும் ஒலித்துக் கொண்டேயிருந்தது. :(
நன்றி நதியானவள்.
வருகைக்கு நன்றி...
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
நாம் பட்ட துன்பங்களை சொல்ல வார்த்தைகள் இல்லை,,நீங்கள் செய்த உதவிகளுக்கு நன்றிகள் பல.இவ்வாறு .தொடர்ந்து செய்யவேண்டும் என விரும்புகின்றோம்
Post a Comment