Wednesday, December 2, 2009

செட்டிக்குளம் - இனிய நினைவுகள்








கடந்த சில நாட்களாகவே செட்டிக்குளம் ஆனந்தகுமாரசுவாமி, இராமநாதன் நலன்புரி கிராம பாடசாலை கா.பொ.த (சா/த) மாணவர்களுக்கும் உ/த மாணவர்களுக்கும் கணித, பௌதீக பாட கருத்தரங்குகள் எமது வளாக மாணவர்களால் ஒழுங்கு செய்து நடாத்தப்பட்டது. எனக்கும் அதில் பங்குகொள்ள வாய்ப்புக்கிடைத்தது.சா/த மாணவர்கள் பெரும்பாலானோர் தரம் 10 ஐ முழுதாக முடிக்கவில்லை. 2008ம் ஆண்டு முழுக்க யுத்தம் அவர்களை அவர்களுடைய இடங்களில் இருந்து துரத்தியிருந்தது. 2009 பற்றி சொல்லதேவையில்லை என் நினைக்கிறேன். பெரும்பாலானோர் வெள்ளைமுள்ளிவாய்க்கால் வரை சென்று மீண்டவர்கள். இறுதி நாளில் இங்கு வந்தவர்கள். உயிரை தவிர மற்றதெல்லாம் விட்டு வந்தவர்கள். அதுவும் இராமநாதன் முகாமில் உள்ளோர் எல்லாம் இழந்து, பெரும்பாலும் புதுக்குடியிருப்பு, முல்லைதீவை சேர்ந்தவர்கள். ஆனந்தகுமாரசுவாமி முகாம் நிலவரம் இராமநாதனிலும் பார்க்க சற்று பரவாயில்லை. தகரக் கொட்டகைகள், நிலம் concrete பண்ணியிருந்தது. இராமநாதன் நிலம் மண்ணால் மெழுகப்பட்டு, தறப்பாளினால் கூரை வேயப்பட்டது. மழை பெய்தால் எப்படியிருக்கும். அதுவும் பாரவூர்திகள் அடிக்கடி சென்றும் வந்தும் நிலம் ஒரே சேறும் சகதியும் தான், தடக்கி விழாமல் நடக்க பயிற்ச்சி எடுக்கவேண்டும்.










நாங்கள் இங்கிருந்து வெள்ளி இரவு சென்று சனி அங்கு தங்கி ஞாயிறு மீண்டும் திரும்புவோம். இதில் (கருத்தரங்கில்)  எமது இளைய நண்பர்களின் பங்கு அளப்பரியது. கருத்தரங்கிற்கான தொடக்கம் பாட சிறு உதவிக்குறிப்புகள், பாட மாதிரி வினாத்தாள்கள், உ/த இற்குரிய பாட notes எல்லாமே photocopy எடுத்து கொடுக்கப்பட்டன.  இக்கருத்தரங்கிற்கு வவுனியா தெற்கு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி வீ.ஆர்.ஏ.ஒஸ்வெல்ட் அம்மையார், கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பாளர் திரு குருகுலராஜா, முகாம் பொறுப்பதிகாரி கப்டன் லகிரு குணவர்த்தன, கப்டன் நவரத்ன ஆகியோரின் ஒத்துழைப்பும் அப்பிரதேசத்திற்கு பொறுப்பான இராணுவ பிரிகேடியர் (பெயர் ஞாபகம் இல்லை) ஆகியோருக்கு நன்றி கூறுவது அவசியம். அவர்களின் ஒத்துழைப்பின்றேல் இதனை நடாத்தியிருக்க முடியாது. நாங்கள் சென்ற வாகனத்திற்கு MOD இடமிருந்து அனுமதி பெற்றுத்தந்த மதிப்பிற்குரிய Professor சாந்தினி, Professor வல்கம ஆகியோரையும் மறக்க முடியாது. காலிழந்து சக்கர நாற்காலியில் வந்து கற்ற மாணவரையும் மறக்கமுடியாது. வகுப்பில் பெரும்பான்மை மாணவிகள்தான். சிலவகுப்பறைகளில் எல்லருமே மாணவிகள்தான். ஆண் மாணவர்கள் யாருமில்லை. யுத்தம் விழுங்கியிருந்தது அவர்களை. சின்னஞ்சிறிசுகள் புத்தகங்களுடன் அலைந்ததை காணக்கூடியதாயிருந்தது, குறிப்பாக சிறுமிகள். ஒன்றைக்கேட்டேன் தான் ஐந்தாம் ஆண்டாம், படிப்பிக்க ஆசிரியர் இல்லையாம், தங்களுக்கும் படிப்பிப்பீங்களோ? என்றது. என்னபதில் கூறுவதென்று தெரியாமல் ஏதோ கூறி மழுப்பிவிட்டேன். வேறு என்ன செய்ய? வவுனியாவில் உறவினர் உள்ளோரெல்லாம் மீள்குடியேறிவிட்டனர். ஆசிரியர்களும் அப்படித்தான். பெரும்பாலான ஆசிரியர்கள் எல்லாம் மீள் குடியேறிவிட்டனர்.




செட்டிக்குளம் மகா வித்தியாலயத்திலிருந்து அதிகாலை 8 மணிக்கெல்லாம் அங்கு ஆஜராகிவிடுவோம், அவர்களும் எற்கனவே வந்து தயாராக இருப்பார்கள். பெரும்பாலும் கணிதம்தான் முக்கிய பாடமாக இருந்தாலும் விஞ்ஞானமும் எடுத்துக்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு கற்பிப்பதில் எமக்கு எந்த பிரச்சனையும் இருந்திருக்கவில்லை. நன்கு கவனித்தார்கள், நன்றாக கஸ்ரப்பட்டு வந்தவர்கள் என்பதற்கு நல்ல எடுத்துக்காட்டு (முள்ளிவாய்க்கால் அனுபவம் என்ன மறக்கப்படகூடியதா?). எங்களுடன் வந்திருந்த சகோதர மொழிபேசும் மாணவர் கூறினார், இவர்களுக்கு இதுவரை ஒழுங்காக கற்பிக்கபடவில்லை என்பதுதான் பிரச்சினையே தவிர, இவர்களில் எந்த குறையுமில்லை. தங்கடை ஆக்களென்றால் படிப்பிற்கும் போது 'வேறு' அலுவல் பார்ப்பார்களாம். அவர் பொலநறுவையை சேர்ந்தவர். மனதுக்கு சற்று நிம்மதியாயிருந்தது.



 




இந்த கருத்தரங்கின் இறுதிநாள் நிகழ்வு 22.11.2009 அன்று நடைபெற்றிருந்தது. மாணவர்களாலேயே முற்றுமுழுதாய் அந்த நிகழ்ச்சி நடாத்தப்பட்டிருந்தது. நிகழ்ச்சிகளும் தரம். இடையில் வைத்த கணிதபாட பரீட்சை மதிப்பெண்களுக்கு பரிசில் வழங்கப்பட்டது. பெரும்பாலும் மாணவியர்தான் பரிசில் பெற்றனர். கருத்தரங்கு நாட்களில் அவர்கள் தந்த உணவு எமக்கு வீட்டை ஞாபகப்படுத்தியது. விடைபெறும் போது அவர்கள் கண்ண்களில் கண்ணீர் எமது அன்புக்கு சாட்சி, எங்கள் கண்களிலும் தான்! என்னதான் முகாம் வாழ்க்கை கஸ்ரம் இருந்தாலும் அவர்களை (அவர்களின் வயதை) பொறுத்தவரை அது ஒரு சந்தோசமான வாழ்க்கையே! இறுதியில் மாணவர்களுடன் உரையாடியபோது அவர்கள் கேட்ட கேள்விகளுக்கு உண்மையில் எங்களிடம் பதில் இல்லை.

இறுதிநாளில் பின்னூட்டம் தந்த மாணவி ஒருவரின் கருத்து,

"எமக்கு மிகமிக ஆசியுடன் கணிதபாடத்தை கற்பித்த எமது அண்ணாக்களுக்கு, நான் கணித பாடத்தில் A எடுப்பேன். நீங்கள் இவளவு காலமும் எமக்கு உதவி செய்தமைக்கு மிகமிக நன்றி தெரிவிக்கிறேன். எங்களுக்கு உதவி செய்த அனைத்து நெஞ்சங்களுக்கும் கோடி நன்றிகள். நான் இறுதிக்காலத்தில் இஞ்சினியாராக வந்து எனது இலட்சியத்தை வெளிப்படுத்துவேன். எமது உறவுகளை சண்டையில் இழந்திருந்தபோதும் உங்களுடன் கவலையின்றி இருந்தோம். திரும்பவும் எனது மிக மிக உள்ளங்கனிந்த நன்றியை தெரிவிக்கின்றேன்". - பா. சயனிகா, தரம் 10.

இன்னுமொரு மாணவி சொன்னார், தனது அண்ணா எங்கே இப்ப இருக்கிறார் என்று தெரியாது, உங்களுடன், அண்ணாவுடன் இருப்பதாக நினைத்தேன், இப்ப நீங்களும் எங்களை விட்டு போறியளோ? -  இதற்கு நாங்கள் என்னபதில் கூறுவது?

Tuesday, December 1, 2009

எனக்கு பிடித்த பாடல் 1





படம் : தேவதை
பாடியவர் : S.P.B.சரண், சந்தியா
இசை: இசைஞானி 'இளையராஜா'



தீபங்கள் பேசும் இது கார்த்திகை மாசம்
மணிகள் போலவே அசைந்து ஆடுதே தீபமே
அது கால காலமாய் காதல் கவிதைகள் பாடுமே
முத்து முத்து விளக்கு முற்றத்திலே இருக்கு
முத்து பொண்ணு சிரிச்ச வெக்கத்தில
பக்கத்துல நெருப்பா அத்தை மகன் இருக்கான்
முத்தம் ஒன்னு குடுத்த குத்தமில்ல

(தீபங்கள் பேசும் ...)

முல்லை ஆத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய
கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் கலைய கலைய
என்னோடு தாலாட்டி வந்தாடும் பூங்காற்று
முல்லை ஆத்து தண்ணி போல ஆசை அலைகள் அலைய
கொள்ளை போன கன்னி நெஞ்சு கொஞ்சம் கலைய கலைய
பொன்னான நாள் பார்த்து
கொண்டாடும் கை கோஅர்த்து
குயில்கள் கூடி குலவை போடும் நாளும் இன்றுதானோ

(தீபங்கள் பேசும்... )

நெருப்பில்லாமல் திரியில்லாமல் எரியும் வான விளக்கு
இருக்கும் பொது அருகில் வந்து வெட்கம் கொஞ்சம் விலக்கு
கனவை கூட கவிதையாகி புலம்பும் இளைய கவியே
கவிதை என்னும் சிறகு கொண்டு பறக்க வேண்டும் இனியே
வெண்ணிலவின் முன்னாலே விண்மீன்கள் ஊர்கோலம்
கண்ணிமையே ஓடாதே என் கனவை தேடாதே
அரங்கம் பாடி அரங்கம் சேரும் நாளும் இன்றுதானோ

(தீபங்கள் பேசும்... )










இது தீபாவளிக்கான பாடலோ அல்லது கார்த்திகை விளக்கீட்டுக்கான பாடலோ என்று தெரியவில்லை.  

Tuesday, November 3, 2009

இரண்டாவது சூரியனும் 2012ம்...

இப்போது பரவலாக 2012 இன் உலக முடிவைப்பற்றிப் பேசப்படுகின்றது..என்ன இது என்று தேடியபோது கிடைத்த சில தகவல்கள் உங்களுடன்.....

1) மாயன் கலண்டர்.




இது ஆதிவாசிகளினால் மத்திய அமெரிக்காவில் எழுதப்பட்ட ஒரு கலண்டர். இவ்வளவு காலமும் மாயன் கலண்டரிலுள்ள விதத்திலே உலகம் இயங்கி வந்துள்ளதாக தகவல்கள் தெரிக்கின்றன. இவர்களின் கணிப்பீடு வானசாஸ்திரத்தில் கிட்டதட்ட சரியாகவே இதுவரை உள்ளது. (உ+ம்) பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பே lunar cycle (The time between two full moons) இன் காலத்தை 29.5300 நாட்கள்(days) என கண்க்கிட்டுள்ளார்கள், ஆக 34 sec தவறு! இவர்களின் கலண்டர் பூமியின் இறுதி 21 DEC 2012 என்கிறது. lunar cycle இன் கணிப்பீட்டின் உடன் ஒப்பிட்டால் 2012 இல்???...

2. Super Volcano


வற்றிவரும் ஆறு

அமெரிக்கவின் Yellowstone National Park இலுள்ள மிகப்பெரிய எரிமலை (super volcano) 2012 அளவில் வெடித்து சாம்பலை கக்குமென பூகோளவியளாளர்கள் (geologist) எதிர்வு கூறியிருக்கிறார்கள், இது வெடித்தால் வெளிவரும் சாம்பல் புகைமண்டலம் சூரிய வெளிச்சத்தை மறைத்து பெருவெடிப்பு எனப்படும் big bang க்கு ஈடாக 15000 வருடங்களுக்கு பூமியை குளிர்நிலைக்கு இட்டுச்செல்லுமாம். விளைவு??

3. நிபிரூ (இரண்டாவது சூரியன்)

இந்த கோள் 3600 வருடங்களுக்கு ஒருமுறை பூமியின் அருகே வந்து செல்வதாகவும், அதில் வேற்றுக்கிரக வாசிகள் வந்து தங்கள் இஷ்டப்படி பூமியிலுள்ள மனிதரை (மனித குரோமோசோம்களை) மாற்றி தங்கள் தேவைகளை நிறைவேற்றிச்செல்வார்களாம்....
இவ்வாறுதானம் குரங்கு முக சாயல் கொண்ட நாம் மனித முகத்திற்கு மாறினோமாம்! இந்தக்கதை ஈராக்கில் அன்று கோலோங்கியிருங்த சுமேரிய நாகரிகத்தில் கிடைத்த எச்சங்களில் இருந்து, அவர்களின் சுவடுகளில் கூறப்பட்டுள்ளது.




விஞ்ஞானப்படி இப்படி ஒரு கோள் பூமியை நெருங்கும் போது பூமியின் ஈர்ப்பு விசைகளில் மிகுந்த மாற்றங்கள் ஏற்ப்படுவதால் பூமி மிகவும் அல்லகோலப்படும். அப்படித்தான் அந்த காலத்தில் டைனோசர்கள் அழிந்து போயின, ஐஸ்யுகம் மறைந்து போயின, அட்லாண்டிஸ், லெமூரியா போன்ற கண்டங்கள் திடுமென கடலுக்குள் மூழ்கின. கொழித்திருந்த நாகரீகங்கள் பல அழிவுக்கு வந்தன என கூறப்படுகிறது.




1984-ஆம் ஆண்டு Infrared Astronomical Satellite-ன் உதவியோடு நாசா ஒரு செய்தியை வெளியிட்டது. 50 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு மிகப்பெரிய மர்மபொருள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக, மீண்டும் 1992 -ஆம் ஆண்டு நாசா இன்னொரு செய்தியை வெளியிட்டது, 7 பில்லியன் மைல்கள் தொலைவிலிருந்து ஒரு கோள் நம் பூமியை நோக்கி நெருங்கி வருவதாக, அதாவது அந்த மர்ம PlanetX நம்மை இன்னும் கிட்ட நெருங்கியிருந்தது. இதற்கு அப்புறம் நாசா இதைப் பற்றி ஒரு மூச்சும் விடவில்லை. இதனை பலரும் புதுசாக கண்டுபிடிக்கப்பட்ட Eris என்ற கோள்தான் அது என்கின்றனர்.

ஆனால் இன்னொரு கூட்டமோ இப்படி நாசாவின் டெலஸ்கோப்புகளில் காணப்பட்ட மர்மகோள் முன்பெல்லாம் பெரும் அழிவை உண்டாக்கிய “நிபிரூ” தான் என்கின்றனர். அது இப்போது பூமியை மிகவும் நெருங்கி வந்துவிட்டதாகவும் தென் துருவ பகுதிகளில் இப்போதெல்லாம் வெறும் கண்ணுக்கும் தெரியும் அளவுக்கு வந்துவிட்டதாகவும் சொல்கின்றார்கள். அடுத்த வருட மத்தியில் அது நம் எல்லாருடைய கண்களுக்கும் தெரியும் அளவுக்கு அருகே நெருங்கிவிடுமாம். 2012-ல் அது இன்னும் நம் பூமியை மிகவும் நெருங்கி அது அதன் பாதையில் கடந்து போகுமாம். அப்போது அது இரண்டாவது சூரியன் போல வானில் காட்சி அளிக்குமாம். உலக அளவில் இதுபதட்டத்தையும் மக்களிடையே பயத்தையும் ஏற்படுத்தும் என்பதால் நாசாவும் அமெரிக்க அரசும் இத்தகவலை மறைத்து வருகின்றது என்கின்றனர் அக்கூட்டம். அதன் போக்கை கண்காணிக்கவே அவசரமாக கொண்டு உலகின் மிகப்பெரிய South Pole Telescope-ப்பை நாசா தென் துருவத்தில் கொண்டு நிறுவியுள்ளதாம்.




இன்றைக்கும் பூமியில் நிகழும் அநேக தட்பவெப்ப மாறுதல்களுக்கும், தட்டுகள் அனாயசமாய் உராய்ந்து உருவாகும் பூமிஅதிர்ச்சிகள் மற்றும் சுனாமிகளுக்கும் நெருங்கி வந்து கொண்டிருக்கும் இந்த நிபிரூ தான் காரணம் அது இன்னும் நெருங்க நெருங்க அதன் தாக்கம் இன்னும் இன்னும் பூமியில் அதிகரிக்கும் என்பது அவர்கள் கருத்து. இன்னும் ஒரு சிலர் கொஞ்சம் அதிகமாய் போய் பூமியை நிபிரூ அனுனாக்கிகள் (நிபிரூவில் வரும் வேற்றுக்கிரக வாசிகள்) கொள்ளை அடிப்பதால் பூமியிலிருந்து இலட்சக்கணக்கானோர் திடீரென காணாமல் போய்விடுவர் என்றும் அதனால் நிபிரூ கும்பலுக்கும் பூமியின் மனிதர்களுக்கும் போர் நேரிடலாமென்றும் கதை விடுகின்றனர்.

நாசா இந்த நிபிரூ கதைகளையெல்லாம் சுத்தமாய் மறுக்கின்றது.
http://astrobiology.nasa.gov/ask-an-astrobiologist/question/?id=2759





"எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றகவே நடக்கும்".வேறு என்னத்தை சொல்ல?

Saturday, October 31, 2009

எனக்கு பிடித்த சில கவிதைகள்

வாசித்த கவிதைகளில் பிடித்த சில கவிதைகளை பகிர்கிறேன்...



நானென்பது யாரென்று
புரியவில்லை
வெறும் புத்தகங்களா
நண்பர்களின் சாயைகளா
அனுபவங்கள் என்று நம்பப்படுகின்ற
புனைவுகளா
காலத்தின் படர்ந்து திரியும்
மூதாதைகளா
எனது உடல் எதனால்
          நிரப்பட்டிருக்கிறது.          
-- லஷ்மி மணிவண்ணன்






ஒரு தரம் காதல்
என்னை மீட்டு தந்தது
ஒரு தரம் புல்லாங்குழல்
என்னை மீட்டுத்தந்தது
ஒரு வண்ணாத்துப்பூச்சியும்
என்னை மீட்டுத்தந்தது
நான் தான் அடிக்கடி
தொலைந்து விடுகிறேன்
-- பூமா ஈஸ்வரமூர்த்தி

 


காதலிப்பதை போல்
பாசாங்கு செய்யாதே!
காதல் நம்
ஆணைக்கு படியாது!
-- ஆலன் வாட்ஸ்






Monday, October 26, 2009

நில்லுங்கள் ராஜாவே.....




எனக்கு சுஜாதா அறிமுகமானது 9ம் ஆண்டில் என்று நினைக்கிறேன், அதற்கு முன்பு ராஜேஸ்குமார், சுபா(சு+பா). இவர்களின் சதக் சதக் கொலைகள், அதற்கு முதல் வாண்டுமாமாவின் சி.ஐ.டி சிங்காரம். நண்பன் மூலம் அறிமுகமானவைதான் சுஜாதா புத்தகங்கள். அன்றிலிருந்து இதுவரைக்கும் எனது மிகச் சிறந்த எழுத்தாளர். இவரிடமிருந்து நான் 'கற்றதும் பெற்றதும்' எராளம்! தமிழகமே கொண்டாடிய - ஆனால் 'இலக்கியவாதிகளால்' புறக்கணிக்கப்பட்ட எழுத்தாளர். எம் ஊர் வாசிகசாலையில் இவருடைய புத்தகங்கள் எராளம் உண்டு. A/L எடுத்த பின்னர் இவருடைய புத்தகங்களுடன் நாள் முழுக்க இருந்த காலமும் உண்டு.  தமிழில் இப்படியொரு எழுத்தாளர் இருக்கிறாரா என்று வியந்தது இருக்கிறேன். எப்போதுமே தொழிலுக்காக இவர் எழுதியது கிடையாது.  சம்பிரதாய எழுத்தாளர்களிடம் இருந்து மிக வேறுபட்டவர். எழுத்து நடையே தனிப்பாணி! எந்தவொரு இடத்திலும் சலிக்காமல் கதையை நகர்த்திச்செல்லும் திறமை அவருக்கே தனி! 2008ம் ஆண்டு நான் 2ம் வருடம் படித்துக்கொண்டிருந்த போது, சக்தி FM இல் மரணச்செய்தியை விசேட செய்தியாக ஒலிபரப்பினார்கள். சிலகாலமாகவே சிறுநீரக கோளாரால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார், சென்னை அப்பலோ மருத்துவமனையில் 22/2/2008 ல் இரவு 9.22 க்கு உயிர்பிரிந்தது!  எனக்கெல்லாம் புத்தகம் வாசிப்பதில் ஆர்வம் வந்தது இவர் புத்தகங்களால் தான். ஓய்வுபெறும் முதல் Barath Electronics  பொறியியலாளராக வேலை பார்த்தார். இவருடைய உழைப்புக்கு கிடைத்த சாட்சி Electronic Voting Machine (EVM) என்று இன்றுள்ள வாக்கெடுப்பு இயந்திரத்தை தயாரித்த BELலின் R & D பிரிவின் சீப் ஆக பணியாற்றினார். இந்த வாக்கெடுப்பு மிஷின் தான் இந்தியாவெங்கும் பயன்படுத்தப் படுகிறது.

  திருச்சிராப்பள்ளி சென்யோசப் கல்லூரியில் அப்துல் கலாமுடன் BSc (Physics) 1952 - 1954 காலப்பகுதியில் கற்றார், பின்னர் ஒரு காலத்தில் இருவரும் இணைந்து ரொக்கட் தொழில்நுட்பத்தை பற்றி தமிழில் எழுத இருந்தும் இறுதியில் நிறைவேறவில்லை!

சுஜாதா ஒரு பேட்டியில்  "என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை
அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன்,
கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ரோஜா வெளிவந்த சமயத்தில், பெங்களூருக் குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், அரவிந்த சாமியுடன் என்னை மண முடி! என்று கதவைத்
தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், பாலம் கதையைப் படித்து விட்டு என்னைக்
கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள்.
மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!"

முதல் கதை வெளிவந்த போது திருச்சி நகரமே அளம்பி விட்டாற்போல இருந்தது. அந்த வட்டாரத்தில் ‘சிவாஜி ' 
இதழின் காப்பிகள் கடகடவென்று விற்றுத் தீர்ந்து விட்டன, எல்லாவற்றையும் நானே வாங்கி விட்டதால்”, தனது முதல் இதழை பற்றி சுஜாதா..


தமிழ் இலக்கியத்தின்  மீது நான் கொண்ட ரசனையை பன்மடங்கு உயர்த்தியதற்காகவே அவருக்கு நிறைய கடன்பட்டிருக்கிறேன்" - கமல்.

"உன் விஞ்ஞானப் பார்வையால் வெளிச்சம் பெற்றன சில மூளைகள்" - கவிஞை தாமரை


நான் வாசித்த இவருடைய சில புத்தகங்கள்:

24 ரூபாய் தீவு
அடுத்த நூற்றாண்டு
அப்பா அன்புள்ள அப்பா
அப்ஸரா
அனிதா இளம் மனைவி
அனிதாவின் காதல்கள் **
அனுமதி
ஆ **
ஆதலினால் காதல் செய்வீர்
ஆரியப்பட்டா
இதன் பெயரும் கொலை
இருள் வரும் நேரம்
இளமையில் கொல்
இன்னும் ஒரு பெண்
ஊஞ்சல்
என் இனிய இயந்திரா **  (எந்திரன்?)
எப்போதும் பெண்     (கருவில் இருந்து கருத்தரிக்கும் வரை ஒரு பெண்ணின் வாழ்க்கை போராட்டம்)
ஐந்தாவது அத்தியாயம்
ஒரு நடுப்பகல் மரணம்
ஒரு பிரயாணம் ஒரு கொலை
ஓரிரு எண்ணங்கள்
 கடவுள் வந்திருந்தார்
கணையாழியின் கடைசிப் பக்கம் (தொகுக்கப்பட்டு புத்தகமாக கீழே)
கணையாழி கடைசிப் பக்கங்கள் **
கம்ப்யூட்டர் கிராமம்
கருப்புக் குதிரை
கரையெல்லாம் செண்பகப்பூ (பின்னர் சினிமாவாக்கப்பட்டது)
கற்பனைக்கும் அப்பால்
கனவுத் தொழிற்சாலை
காயத்ரி (பின்னர் சினிமாவாக்கப்பட்டது)
குரு பிரசாத்தின் கடைசி தினம்
கொலை அரங்கம்
சில வித்யாசங்கள்
சிறீரங்கத்து தேவதைகள் **
சிறு சிறு கதைகள் **
சுஜாதாவின் மர்மக் கதைகள்
செப்டம்பர் பலி
சொர்க்கத் தீவு
தங்க முடிச்சு
திசைக் கண்டேன் வான் கண்டேன்
தீண்டும் இன்பம்
தூண்டில் கதைகள்
தோரணத்து மாவிலைகள்
நகரம்
நிதர்சனம்
நிர்வாண நகரம்
நில் கவனி தாக்கு
நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம்
நில்லுங்கள் ராஜாவே
நிலா நிழல்
நிறமற்ற வானவில்
நிஜத்தைத் தேடி
நைலான் கயிறு
பத்து செகண்ட் முத்தம்
பதினாலு நாட்கள்
ப்ரியா (பின்னர் சினிமாவாக்கப்பட்டது)
பிரிவோம் சந்திப்போம் 1,2 (பின்னர் சினிமாவாக்கப்பட்டது - ஆனந்தத் தாண்டவம்) **
பெண் இயந்திரம்
பேசும் பொம்மைகள்
மத்யமர்மறுபடியும் கணேஷ்
ிஸ் தமிழ்த் தாயே நமஸ்காரம்
மீண்டும் ஒரு குற்றம்
மீண்டும் ஜீனோ **
மூன்று குற்றங்கள்
மூன்று நாள் சொர்க்கம்
மூன்று நிமிஷம் கணேஷ்
மேற்கே ஒரு குற்றம்
ரத்தம் ஒரே நிறம்
வசந்த காலக் குற்றங்கள்
வண்ணத்துப் பூச்சி வேட்டை
வஸந்த்
வாய்மையே சில சமயம் வெல்லும்
வானத்தில் ஒரு மௌனத் தாரகை
வானமென்னும் வீதியிலே
விக்ரம் **
விஞ்ஞானச் சிறுகதைகள்
விடிவதற்குள் வா
விபரீதக் கோட்பாடு
வீட்டுக்குள் வரும் உலகம்
வேணியின் காதலன்
வைரங்கள்
ஜன்னல் மலர்
ஜீனோம்
கமிஷனருக்குக் கடிதம்
கற்றதும் பெற்றதும் 1**, 2
சுஜாதா பதில்கள் 1,2

தலைமைச் செயலகம்
கணிப்பொறியின் கதை
கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு
சிலிக்கன் சில்லுப் புரட்சி  (தமிழில் ஓர் மைல் கல்)
மெரீனா **
21ம் விளிம்பு
கடவுள்
கடவுள் இருக்கிறாரா
கடவுள்களின் பள்ளத்தாக்கு
ஏன் எதற்கு எப்படி 1,2

**இடப்பட்டவை மென்புத்தகமாக உண்டு. அஞ்சலிடுங்கள் அனுப்பி வைக்கிறேன்: k.abimaran(--at--)gmail.com


கதை, வசனம் எழுதிய சில திரைப்படங்கள்..
கன்னத்தில் முத்தமிட்டால்
விக்ரம்
சிவாஜி
அந்நியன்
ரோஜா
இருவர்
இந்தியன்
உயிரே
நாயகன்
தசாவதாரம்
முதல்வன்
கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்
பாரதி
ஆயுத எழுத்து







மனைவி பிள்ளைகள், பேரனுடன்..

 


நிஜ சுஜாதா (மனைவி)

திருவல்லிக்கேணி வீடு





சில உதிரி தகவல்கள்...
மின்னஞ்சல்: writersujatha@hotmail.com
தொலைபேசி: 914424993672
நடாத்திய இணைய இதழ்: www.ambalam.com
இணையதளம்: www.writersujatha.com
விலாசம்: 10, ஜஸ்டிஸ் சுந்தரம் ரோடு,
                     மைலாப்பூர்,
                    சென்னை

Sunday, October 25, 2009

பதிய வந்த கதை......


இந்த பூவில் எனக்கு கொள்ளை பிரியம் ஏனோ தெரியாது! நிறமும் வாசமும் அதற்கே உரிய தனித்துவம்! எங்கள் வீட்டு சாமிப்படங்களை கூடுதலாக அலங்கரித்த பூவிது. செம்பருத்தி, தூய தமிழ்ப் பெயர், பெயரிலே ஒருவித கிறக்கம் (மகளுக்கு இடலாம் என்றிருக்கிறேன்!). கடும் பச்சை நிற இலைகளினூடே மெல்லிய காம்புடன் சிவப்பாய் மலர்ந்திருக்கும். சில சமயம் மரம் முழுதுமே பூக்களாய்தான் இருக்கும், சிலசமயம் எதுவுமே இருக்காது! அந்தக்காலம் இதன் இலையை தலைக்கு வைத்துத்தான் 'சனி நீராடுவோம்'. நல்ல குளிர்ச்சி, அனுபவித்தவர்களுக்கே அதன் அருமை தெரியும்! நெஞ்சிலே இறுக்கமாக ஒட்டிய பூவின் பெயரில் ஒரு முயற்ச்சி, அவ்வளவே!